சிதம்பரம் : நடிகர் சூர்யா நடிப்பில் நவ.2ஆம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இடம் ஜெய் பீம். இந்தப் படத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் வழக்குரைஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற காட்சியொன்றில் அக்கினி கலசம் பொறித்த காலண்டர் இடம்பெற்றிருக்கும். இது குறிப்பிட்ட சாதி மக்கள் பயன்படுத்தும் குறியீடு ஆகும். மேலும் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்துக்கு குரு மூர்த்தி எனப் பெயரிடப்பட்டிருந்தது.
இதற்கு வன்னியர் சங்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் (த.செ. ஞானவேல்), தயாரிப்பாளர் (2டி என்டர்டெயின்மென்ட் நடிகர் சூர்யா, ஜோதிகா) மற்றும் வெளியீட்டாளர் (அமேசான்) ஆகியோர் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் புதா. அருள்மொழி, “நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை பற்றி இழிவாக படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சூர்யா மற்றும் படக் குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்” என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (நவ.23) சிதம்பரம் நீதிமன்றத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஜெய் பீம் படக்குழுவினர் மீது வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது, “அவதூறு பரப்புவது, இரு சமுதாயத்தினரிடையே வன்முறையை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார் மனு தாக்கலின்போது, மாவட்ட செயலாளர் மகேஷ் அவர்களுடன் பாமக நகர தலைவர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க : Jai Bhim Controversy: வருத்தம் தெரிவித்தார் ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல்!