கடலூர்: பரங்கிப்பேட்டை அருகேயுள்ள பெரியகுமட்டியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, அந்தப் பகுதியில் டூவீலர் மெக்கானிக் கடை வைத்திருந்தார். இவர் நேற்று (ஜூலை 10) வாகன உதிரி பாகங்கள் வாங்குவதற்காக பேருந்தில் கடலூர் சென்றுள்ளார்.
பின்னர் உதிரி பாகங்கள் வாங்கிவிட்டு மீண்டும் பேருந்தில் ஊருக்கு வந்து இறங்கியுள்ளார். இந்நிலையில், வெங்கடாஜலபதியை அவரது உறவினர் ஒருவரும் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவரும் அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் வெங்கடாஜலபதிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து தனது மனைவி லெட்சுமியிடம் கூற அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெங்கடாஜலபதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக லெட்சுமி பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
விசாரணையின் போது, வெங்கடாஜலபதி பேருந்தில் வரும்போது இடம் பிடிப்பதில் 3 பேருடன் தகராறு ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது. 3 பேர் அவரை அடித்ததும்; அதன் காரணமாகவே அவர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்ததும் தெரிய வந்தது.
மேலும் தகராறில் ஈடுபட்டவர்கள் புவனகிரி சுவீகார எடத்தைச் சேர்ந்த வேணுகோபால், சிதம்பரம் பள்ளிப்படை பகுதியைச் சேர்ந்த அருள்தாஸ், சிதம்பரம் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களை காவலர்கள் வலைவீசி தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டிற்கு விளையாட அழைப்பதுபோல் அழைத்து மோசடி