கடலூர் சரவணபவ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், கூட்டுறவுத்துறை சார்பில் மலிவு விலையில் ரூ. 500க்கான மளிகைப் பொருள்கள் தொகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் வி. அன்புச்செல்வன் முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், " கடலூர் மாவட்டத்தில் செயல்படும் 1,420 நியாய விலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள சுமார் 7லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத்தொகை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 100 குடும்ப அட்டை தாரர்களுக்கு சுழற்சி முறையில் டோக்கன் வழங்கப்பட்டு நிவாரணம் பாதுகாப்பான முறையில் வழங்கப்பட்டுள்ளது.
நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு கையுறை, முகக் கவசம், கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி, தண்ணீர், சோப்பு ஆகியவை நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நல வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரிசி 15 கிலோ, துவரம் பருப்பு 1 கிலோ, சமையல் எண்ணெய் 1 லிட்டர் ஆகியவை அடங்கிய தொகுப்பு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் படி, கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்கும் பொருட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் நடமாடுவதை தவிர்க்கும் நோக்கில். கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் அன்றாடம் 55 வாகனங்கள் மூலம் 155 இடங்களில் அவர்தம் இருப்பிடத்திற்கே சென்று காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
கரோனாவால் வருமானம் இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக வெளிச்சந்தையில் சுமார் 600 ரூபாய் மதிப்புடைய 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரூ. 490க்கு மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகுப்பு அனைத்து நியாய விலைக் கடைகள், பசுமை காய்கறிகள் விற்பனை செய்யும் வாகனங்கள் மூலம் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'மாஸ்க் இல்லையா... வாங்க கரோனா நோயாளியுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்' - மரண பயம் காட்டிய திருப்பூர் போலீஸ்!