கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆல்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வருகின்றன.
இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் மாநில அரசு சார்பாக ஒளிபரப்பப்பட்டு வரும் கல்வி தொலைக்காட்சி மூலம் வீட்டுப்பள்ளி திட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடங்கள் அட்டவணைப்படி ஒளிபரப்பாகி வருகிறது. பள்ளிக்கு சென்று கல்விக் கற்று வந்த மாணவர்களுக்கு, திடீரென ஒரு சில வாரங்களில் ஆல்லைன் கல்வி முறைக்கு மாறுவதோ அவ்வளவு எளிதல்ல. ஆல்லைன் கல்வி என்ற டிஜிட்டல் கல்வி முறையுடன் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பள்ளி செல்கிறோம் என்ற மனநிலையிலிருந்து விலகி, வீட்டில் லேப் - டாப் மற்றும் அலைபேசி மூலம் கல்வி கற்கும் முறைக்கு மாணவர்கள் மாறுவதே பெரும் சவாலான விஷயம். ஆனால் ஆன்லைன் கல்வியில் மாணவர்களுக்கு இருக்கும் பெரும் சவாலான விஷயம், ஆன் லைனில் கல்வி கற்பதற்கான சூழல் இல்லாமல் இருப்பது தான். இங்கே பெரும்பாலான கிராமப்புற மாணவர்களிடம் ஆண்ட்ராய்டு மொபைலும், லேப் - டாப் வசதிகளும் இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கான இணையதள வசதி செய்யப்படாமல், மாணவர்களை ஆல்லைன் கல்வி முறைக்கு மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன.
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநில கல்வித் துறை அலுவலர்களால் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஆன்லைன் கல்வி கற்க எவ்வளவு விழுக்காடு மாணவர்களுக்கு வசதி உள்ளது என்று கணக்கிடப்பட்டது. அந்த ஆய்வில் மாநிலத்தில் உள்ள 34 விழுக்காடு மாணவர்களின் வீட்டில் தான் அலைபேசி, தொலைக்காட்சி வசதிகள் இருப்பது தெரியவந்தது. இதனால் மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி கற்கும் வாயப்பு உள்ளதா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது.
தனியார் பள்ளி மாணவர்கள் ஆல்லைனில் கல்வி கற்று வருகிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எழுந்தது. இந்நிலையில், ஆன்லைன் கல்வி கற்க இயலாத கிராமப்புற மாணவர்களுக்கு நேரில் சென்று பாடம் நடத்தி வருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் மகாலட்சுமி.
கரோனா பரவல் அதிகமாகி வரும் சூழலில் நேரில் சென்று பாடம் நடத்த வேண்டுமா என்று அவரிடம் பேசினோம். அதற்கு அவர், ''27 வருடமாக அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். கரோனாவால் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனை தடுக்கும் விதமாக மாணவ - மாணவிகளுக்கு விழிப்புணர்வும், அறிவுரையும் தான் முதலில் வழங்கினேன்.
விழிப்புணர்வு எப்போது வகுப்பாக மாறியது?
இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அரசு சார்பில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. அந்தப் புத்தகங்களில் உள்ள பாடங்களை படிப்பதில் மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர். இதனால் மாணவர்களின் பயம் பெற்றோருக்கும் தொற்றிக்கொண்டது. இதனால் வாட்ஸ்அப் மூலம் ஒரு குழு தொடங்கி அதில் வீடியோக்கள், தகவல்கள் மூலம் பாடம் நடத்தினேன். ஆனால் பல மாணவர்களிடம் அலைபேசியே இல்லை என்ற தகவல் வந்தது. ஒரு தெருவில் ஒரு அலைபேசி என்ற சூழல் நிலவியது.
இதனால் அனைவருக்கும் சமமான முறையில் கல்வி சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு மாணவரின் வீட்டிற்கும் சென்று பாடம் நடத்த திட்டமிட்டேன். பின்னர் ஒரு சில கிராமங்களில் குழுவாக மரத்தடி நிழல், திண்ணை போன்ற இடங்களில் அமர்ந்து பாடம் நடத்துகிறேன். இது மாணவர்களின் மனநிலையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேரில் வந்து பாடம் எடுக்கும் ஆசிரியர் மகாலட்சுமி பற்றி மாணவர்களிடம் கேட்டபோது...
கரோனாவால் பள்ளிகளை மூடிவிட்டார்கள். அரசு கொடுத்த புத்தகத்தில் பாடம் கொஞ்சம் புதிதாக உள்ளது. ஆல்லைன் மூலம் கல்வி கற்க அலைபேசி இல்லை. இந்த நேரத்தில் தெருவில் இருவர் வைத்திருந்த அலைபேசி மூலம் வாட்ஸ்அப் குழுவில் கல்வி கற்க முயன்று பார்த்தோம். ஆனால் அது சரிவரவில்லை. பின்னர் மகாலட்சுமி ஆசிரியர் நேரில் வந்து பாடம் எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி'' என்றனர்.
புதிய பாடத்திட்டங்களை எப்படி கற்பிப்பது எப்படி புரிந்து கொள்வது என திகைத்து இருந்த தங்களுக்கு ஆசிரியர் நேரில் வந்து பாடங்களை நடத்துவது எங்களுக்கு கிடைத்த வரம். இதுபோல் அனைத்து ஏழை எளிய கிராமத்தில் உள்ள மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்கள் நேரில் சென்று வகுப்புகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதனையும் படிங்க: தனியார் கொள்ளைக்கு வழிவகுக்கிறதா புதிய கல்விக் கொள்கை? - பாகம் 2