கடலூர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தியாவினுடைய ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசும் தோல்வியைத் தழுவ வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம்.
பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து இந்தியாவை மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளையும் காப்பாற்ற வேண்டும். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். கூட்டணி குறித்து, திமுகவுடன் தற்போது இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை முடியும் நிலையில் உள்ளது. எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதை திமுகதான் முடிவுசெய்யும்.
தமிழ்நாட்டில் பணம் செலவு செய்யாமல் கூட்டம் கூடுவது ராகுல்காந்திக்காக மட்டுமே. காங்கிரசால் நாட்டின் வளர்ச்சியைக் கொண்டுவர முடியும். இளைஞர்கள் மத்தியில் நல்ல ஒத்துழைப்பு உள்ளதால், அவருக்கு ஏராளமான கூட்டம் கூடுகிறது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மீனவர்களுடன் அவர் கடலில் குளிப்பது சரியா எனக் கேள்வி எழுப்பியுள்ள குஷ்புவிற்கு நல்ல தலைமை, நல்ல பண்பு, நல்ல நடத்தை, நல்ல செய்தியைப் பற்றி பேசத் தகுதியில்லை" எனத் தெரிவித்தார்.
பேட்டியின்போது மாவட்டத் தலைவர் திலகர், மாநிலச் செயற்குழு உறுப்பினர் குமார் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.