கரோனாவால் உலகெங்கும் உள்ள 190க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து இதுவரை மீண்டும் தொடங்கப்படாததால், வெளிநாட்டில் இருப்பவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் பலர் தவித்துவருகின்றனர்.
அதேபோல, கிர்கிஸ்தான் நாட்டில் மருத்துவம் படித்துவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவர்கள், தமிழ்நாட்டிற்குத் திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.
இதுகுறித்து கிர்கிஸ்தானிலுள்ள மாணவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களுக்குச் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளபோதும், தமிழ்நாட்டிற்கு ஒரு விமானம் கூட இயக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், மாணவர்கள் இந்தியத் தூதரகத்தை தொடர்புகொண்டபோது தமிழ்நாடு அரசிடம் உதவி கேட்கச் சொன்னதாகவும் அந்த வீடியோவில் மாணவர்கள் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள மாணவர்கள், தாங்கள் தாயகம் திரும்ப தேவையான நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனைக்கு ரூ. 3 ஆயிரம் கட்டணம்' - மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு