கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழிச் சாலையில் செந்தில் என்பவருக்குச் சொந்தமான வெடிமருந்து குடோன், பட்டாசு கடை உள்ளன. இந்தப் பகுதியிலேயே அவரது வீடும் அமைந்துள்ளது.
இந்த வீட்டில் செந்தில் அனுமதியின்றி வெடி மருந்துப் பொருள்களை வைத்துள்ளதாக காவல் துறையினர், வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், காவல் துணைக் கண்காணிப்பாளர் லாமேக், வட்டாட்சியர் சத்தியன் உள்ளிட்ட அலுவலர்கள் செந்தில் வீட்டைச் சோதனையிட்டனர்.
இதில், சுமார் 40 கிலோ சல்பர், 7 கிலோ அலுமினிய பவுடர், வெடிமருந்துக் கலவைக்குப் பயன்படுத்தப்படும் கரி 50 கிலோ உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின் செந்திலின் வெடி மருந்து குடோனையும் ஆய்வு மேற்கொண்ட பிறகு, அனுமதியின்றி வீட்டில் வைத்திருந்து வெடி மருந்தைப் பறிமுதல்செய்தனர். தொடர்ந்து வட்டாட்சியர் சத்யன் அளித்த புகாரின் அடிப்படையில், அண்ணாமலைநகர் காவல் துறையினர் செந்திலை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.