கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரம் பகுதியில் தென்பெண்ணையாறு உள்ளது. இங்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு ஆற்றில் மணல் எடுப்பதற்கு 50க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் கஸ்டம்ஸ் சாலையில் அணிவகுத்து வந்தனர். இதனைப் பார்த்த விஷ்வநாதபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளை சிறைபிடித்து வந்திருந்த டிராக்டர்களை தென்பெண்ணை ஆற்றில் அனுமதிக்கவில்லை. மேலும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, "விஸ்வநாதபுரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. மேலும் கடந்தாண்டு கடலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுப்பணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படும் என அறிவித்திருந்தார். இதுமட்டுமின்றி தற்போது இந்த பகுதியில் 200 அடிக்குக் கீழ் மோட்டாரைப் பயன்படுத்தி தண்ணீர் எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்து உள்ளோம்.
இது மட்டுமின்றி நாளடைவில் இந்த பகுதியில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வீடு கட்டுவதற்கு மணல் அள்ளினால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் அளவில் பாதிக்கப்படுவோம். மேலும் தடுப்பணைகள் கட்டும் பணி முழுவதும் நின்றுவிடும். ஆகையால் தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுக்க அனுமதிக்க மாட்டோம்" என பொதுமக்கள் திட்டவட்டமாக கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெல்லிக்குப்பம் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் பொதுமக்கள் அரசு அதிகாரிகளையும், டிராக்டர்களையும் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர் . பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கை விடாததால் சிறைபிடிக்கப்பட்ட அலுவலர்கள், டிராக்டர்கள் அங்கிருந்து மணல் எடுக்கமுடியாமல் சென்றனர் .