ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில், கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் சி.சாத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அருள்பிரகாசம், திருமுகம், இளங்கோவன், செல்லையா, கிருஷ்ணமேனன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை கடந்த 2ஆம் தேதி நடத்தப்பட்டது.
வாய்க்கு எண்ணிக்கையின் போது துணை வாக்காளர் பட்டியலில் அருள் பிரகாசம் என்பவரின் பெயர் இல்லை.
இதனால் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில், ' சி.சாத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நாளை காலை 9 மணிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதேபோல் வேட்பாளர்களின் பெயர் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டால், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் சுற்று அறிக்கையின்படி வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை சம்பந்தப்பட்ட பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகளை தொடக்க எண்ணிக்கையின் போது, தனியாகப் பிரித்து எடுத்து மூடி, முத்திரையிட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதில் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் கோரணப்பட்டு சிற்றூராட்சி வார்டு எண் 1, குமராட்சி ஊராட்சி ஒன்றியம் வெள்ளூர் சிற்றூராட்சி வார்டு எண் 5, மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய ஆணைவாரி சிற்றூராட்சி வார்டு எண் 3, ஆகிய பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 9.30 மணிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தொடர்புடைய வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வருகிற ஜனவரி 10ஆம் தேதிக்குள் பதவியேற்பு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதவியேற்பு செய்து கொண்ட உறுப்பினர்கள் 11ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ள ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்' என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் ஆட்சியில்தான் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் -அமைச்சர் ஜெயக்குமார்