கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நவீனமயமாக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
தமிழ்நாட்டில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக ஒரு முதன்மை நிறுவனம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நுகர்வோர் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆண்டுக்கு ஆண்டு புதிய பட்டு மற்றும் பருத்தி ரகங்களை அறிமுகம் செய்து தமிழ்நாட்டு மக்களுடைய நுகர்வோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கைத்தறி விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், கோ.ஆப் டெக்ஸ் கடைகள் பழமைவாய்ந்த நிலையங்களாக இருந்ததை தனியார் கடைகளுக்கு நிகராக புதியதாக மாற்றி வருகிறோம். அதில் ஒரு முயற்சியாகத்தான் விருதாச்சலத்தில் இயங்கிவரும் இந்த கடை நவீனமயமாக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.
அதாவது ,கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தை பொருத்தவரையில் 275 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையை எட்டி இருக்கிறோம். இன்னும் கூடுதலாக 20 சதவீத விற்பனையை எட்ட வேண்டும் என்கிற முனைப்போடு விற்பனையை தொடங்கியிருக்கிறோம். தீபாவளியை பொருத்தவரை இதற்கு முன்னால் நம் அரசு நிறுவனங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு நம்முடைய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலமாக உடை கொடுத்து வந்தோம். இந்த ஆண்டு 140 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையை எட்டுவோம் என்று நினைக்கிறோம்.
விழாவிற்கு பேனர் வைப்பது ஒரு கலாச்சாரமாக ஆகிவிட்டது என்றும் மேலும் சட்டம் அனைவருக்கும் சமமானது என்றும் சட்டத்தை மதித்து அனைவரும் நடக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கைத்தறி துறை இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்