கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஆசியாவின் நெற்களஞ்சியமான டெல்டாவை பாலைவனமாக்க ஏற்பாடு செய்துவிட்டு, அந்த கானல் நீரை நம்பி, நீங்கள் இந்தத் திட்டங்களை ஆதரிக்கலாம் என தமிழ்நாடு அரசு சொல்கிறது. எட்டாண்டு காலமாக இடைவிடாமல் நான் போராடி வருகிறேன். மீத்தேன் காஸ், ஷேல் காஸ், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு 324 கிணறுகளுக்கு ஒப்பந்தம் மத்திய அரசு போட்டு இருக்கிறது. 13 உயிர்களைக் காவு வாங்கிய வேதாந்தா நிறுவனத்தோடு 274 கிணறுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
உரிமத்தை ரத்து செய்ய தயாரா?
இந்த உரிமத்தை முதலில் ரத்து செய்ய தமிழக அரசு தயாரா? மீதமுள்ள கிணறுகளுக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய தயாரா? தமிழக மக்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று ஏமாற்றக்கூடாது.
இது நம்பிக்கை துரோகம். நம்பிக்கை மோசடி. நீட் தேர்வை வேண்டாமென்று அமைச்சரவையில் முடிவுசெய்தோம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். தமிழக அரசு நீட்தேர்வு வரவே வராது என கூறியது.
ஹைட்ரோ கார்பன்
ஆனால் நீட் தேர்வு வந்தது. ஹைட்ரோ கார்பன் திட்டம், காவிரி டெல்டா பகுதியை பாலைவனம் ஆக்கிவிடும். அதுமட்டுமில்லாமல் கடலூர் நாகை மாவட்டத்தில் பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்க 57,700 ஏக்கர் நிலத்தை 2017 ஆம் ஆண்டு ஒப்படைத்துள்ளது.
இதனை ரத்து செய்ய தயாரா இப்படி ஒப்பந்தங்கள் போட்டுவிட்டு காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக ஆக்கப் போகிறோம் என்று சொல்வது இதைவிட மக்களை ஏமாற்றுகின்ற மோசடி வேறு இருக்க முடியாது. ஆளியா கம்பெனியோடு ஐம்பதினாயிரம் கோடிக்கு பெட்ரோல் கெமிக்கல் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போட்டு இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு அமெரிக்கா சென்றபோது தமிழக முதல்வர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளதாக அந்த நாட்டு அதிபர் முதலமைச்சரை சந்தித்து விட்டுச் சென்றிருக்கிறார்.
ஏமாற்று முயற்சி
இந்தத் திட்டமும் காவிரி டெல்டா மாவட்டங்களில் தான்செயல்பட போகிறது. இந்த மூன்று திட்டங்கங்களையும் ரத்து செய்யாமல் நாங்கள் இந்த திட்டங்களை ஏற்கவில்லை என மத்திய அரசுக்கு அறிக்கை கொடுக்காமல் மத்திய அரசிடம் பேசி விட்டு வந்து இருக்கிறோம் என கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சி.
நான் பாராளுமன்றத்தில் ஹைட்ரோகார்பன் தமிழகத்துக்கு மரண அடி என்று பேசினேன். மத்திய அரசு இது போன்ற திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை பொதுமக்கள் கருத்து கேட்க வேண்டிய தேவை இல்லை என அறிவித்துள்ளது.
ஒப்பந்தம்
நமக்கு இருந்த ஒரு சிறு பாதுகாப்பு கூட இதன் மூலம் அகற்றிவிட்டனர். காவிரி டெல்டாவை பாலைவனமாக்க திட்டமிட்டு இவர்கள் ஒரு பக்கத்தில் மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடு செய்துவிட்டார்கள். மேட்டுருக்கு தண்ணீர் வராது இங்கு பாசனம் செய்ய முடியாது நிலங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்க வேண்டிய விபரிதம் ஏற்பட்டுள்ளது.
இவற்றை எல்லாத்தையும் மூடி மறைத்து தமிழக அரசு படுபயங்கரமான ஒரு வேலையில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றால் 2017ஆம் ஆண்டு ஜூலை 19ல் கொடுத்த அறிக்கையை திரும்பப்பெற வேண்டும். பெட்ரோலிய ரசாயன திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 57,700 ஏக்கர் நிலம் மற்றும் ஓஎன்ஜிசி வேதாந்தா நிறுவனத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்