கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்றது. அதில், வேளாண்துறை முதன்மைச் செயலரும், கடலூர் மாவட்ட பேரிடர் சிறப்பு அலுவலருமான ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.சி.சம்பத் , 'கடலூர் மாவட்ட நிர்வாகம் அனைத்துப் பேரிடர் காலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொண்டு செயல்பட்டு வருகிறது.
அதேபோல், 'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அதனை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக, மாவட்ட மக்கள், கால் நடைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மழை, புயல் ஏற்பட்டால் தாழ்வான பகுதிகள் மற்றும் குடிசைப் பகுதியில் உள்ள 60 ஆயிரம் பேரையும் பாதுகாப்பாக தங்க வைக்க பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன" எனத் தெரிவித்தார்.
அதையடுத்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி கூறுகையில், "இன்று முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் முழுமையான மருத்துவர்கள், செவிலியர் பணியில் இருப்பர். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். புயல் குறித்து பயப்படத் தேவையில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பேரிடர் காலங்களில் அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை' - ஆட்சியர் எச்சரிக்கை