கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தொடர்ச்சியாகத் தடைசெய்யப்பட்ட புகையிலை சம்பந்தப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட பொருள்களை விற்பதாகக் காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து சிதம்பரம் நகர காவல் துறையினர் இன்று (மார்ச் 29) அதிரடியாக சிதம்பரம் மார்க்கெட் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது சிதம்பரம் நகர காவல் நிலையம் பின்புறம் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் மான்சிங் என்பவர் பல்பொருள் சரக்கு விற்கும் கடை வைத்து வியாபாரம் செய்துவருகிறார்.
இவரது கடையில் காவல் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தியதில் இவரது கடை, மேல்புறம் உள்ள அலுவலகங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் தனி வீடு எடுத்து அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டைகள் போதை தரும் புகையிலைப் பொருள்களை வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து மேலும் சோதனை செய்ததில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அனைத்தையும் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
கடை உரிமையாளர் மான்சிங் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2 டன் விரலி மஞ்சள் பறிமுதல்!