கடலூர்: சிதம்பரம் அருகே வங்க கடலையொட்டி பிச்சாவரம் அமைந்துள்ளது. இது உலகின் இரண்டாவது பெரிய அலையாத்தி காடாகும். பிச்சாவரம் 1,357 ஹெக்டர் நிலப்பரப்பு கொண்டது. இப்பகுதியில் சிறு சிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளில் 177 வகையான பறவை இனங்கள் வந்து செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
பிச்சாவரம் காடு ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும். இதில் சுரபுன்னை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன. இம்மரத்தில் இருக்கும் காய்கள் சேற்றில் விழுந்து, சில ஆண்டுகளில் மரங்களாக வளர்ந்துவிடும். மரங்களுக்கு இடையில் ஏராளமான பறவை இனங்கள் வசித்து வருகின்றன. நவம்பர் முதல் ஜனவரி வரை பல்வேறு நாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக வரும் பறவைகளுக்கு பிச்சாவரம் புகலிடமாக விளங்குகின்றது.
இந்த அலையாத்தி காடுகளில் படகுகள் மூலம் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்து ரசித்து வருவது வழக்கம். வனத்துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் இந்த பிச்சாவரம் மையம் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது. இப்படிப்பட்ட பிச்சாவரம் சர்வதேச 'ராம்சார்' என்னும் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களுக்கான பட்டியலில் இணைந்துள்ளது. கடலூர் மாவட்டத்திற்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
இதையும் படிங்க: சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் 3 சதுப்பு நிலங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!