கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டுவந்தவர் நிலவழகன் என்ற சுபாஷ் (35). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்துவந்தார்.
இந்நிலையில், நேற்று மாலையில் அவர் கீழ் அருங்குணம் பகுதியில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது.
ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அவரது நண்பர்கள் மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சுபாஷின் உடல் உடற்கூறாய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் கீழ்அருங்குணம் பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தினர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஏடிஎஸ்பி பாண்டியன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை தவிர்க் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட சுபாஷ் ஏற்கனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் கைதானவர். இதனால் முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நெல்லிக்குப்பம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் நள்ளிரவில் தொடரும் பைக் ரேஸ் - 6 இளைஞர்கள் கைது