கடலூரில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகள், ஏரிகள், குளங்களிலும் நீர் நிரம்பி குடியிருப்புப் பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. சில ஆறுகளின் தடுப்பணைகளைத் தாண்டி, உபரி நீர் கடலில் கலக்கிறது. மேலும் தொழுதூர் அணைக்கட்டில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர், வெள்ளாற்றில் கரை புரண்டு ஓடுகிறது.
இந்நிலையில் திட்டக்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளை லாரி மூலம், வெள்ளாற்றில் ஓடும் தண்ணீரில் கொண்டுவந்து கொட்டுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் தண்ணீர் மாசுபடுவது மட்டும் இல்லாமல், அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தும் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் என்றும்; குப்பைக் கழிவுகளைக் கொட்டும் பேரூராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடந்தால், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
'வைகோ மட்டும் தான் தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க அரசியல்வாதி' - அமைச்சர் செல்லூர் ராஜூ