கடலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக டி.ஆர்.வி.எஸ். ஶ்ரீரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இதையடுத்து விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளரான பழ கருப்பையா பேசியதாவது:
தற்போது எடப்பாடி தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. அவரிடம் உள்ள பணத்தை பங்கு போட்டுக் கொள்வதற்கான கூட்டணியாக உள்ளது.
தான் மட்டுமே பதவியில் இருக்க வேண்டும் என்ற கொள்கையை தவிர வேறு எந்த கொள்கையும் இல்லாமல் இருப்பவர்தான் எடப்பாடி. காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா முதலமைச்சர் நாற்காலியில் எடப்பாடி அமர்ந்துகொண்டு அடிமையாக நடந்துவருகிறார்.
போக்குவரத்துத் துறையில் அண்டை மாநிலங்களில் எல்லாம் நஷ்டம் வராமல் உள்ள சூழ்நிலையில், 25 ஆயிரம் பேருந்துகளை வைத்துக் கொண்டு 60 விழுக்காட்டுக்கு மேலாக பேருந்து கட்டணத்தை உயர்த்தி நிர்வாகம் செய்யும் தமிழ்நாட்டில் மட்டும் எப்படி 15 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.
தற்போது தமிழ்நாட்டுக்கு நான்கு லட்சம் கோடி கடன் உள்ளது. ஆனால் மக்களை ஏமாற்றும் வகையில் தாலிக்கு தங்கம், இலவச ஸ்கூட்டர் என்ற திட்டங்களை கூறிவருகின்றனர்.
இலவச ஸ்கூட்டர் திட்டத்தில் இதுவரை எவ்வளவு பேர் பயனடைந்து இருப்பார்கள். கிராமத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில் கூட பயனடைந்து இருக்கமாட்டார்கள். அதுபோல் தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தில் பல லட்சம் பேர் விண்ணப்பித்துவிட்டு திருமணம் வரை தங்கம் கிடைக்காமல் திருமணத்தை முடித்துக் கொண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டனர்.
ஆனால் இதுவரை அவர்களுக்கு அந்தத் திட்டம் போய் சேரவில்லை. இதுபோன்ற நடைமுறையில் முடியாத திட்டங்களை வெறும் விளம்பரத்துக்காக அறிவித்து அரசியல் நடத்திவருகின்றனர்
அதிமுகவுக்கு நல்லது எது, கெட்டது எது என்று சொல்வதற்கு யாருமில்லாமல் அல்லாடிக்கொண்டு வருகின்றனர். எனவே தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் ஒரு கேவலமான ஆட்சியை மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் திட்டக்குடி சட்டப்பேரவை உறுப்பினருமான கணேசன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.