கடலூர்: கடற்கரையில் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டைகள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில், 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரை, கோரி, சாமியார் பேட்டை, புதுக்குப்பம், பரங்கிப்பேட்டை வரை சுமார் 50 கிலோ மீட்டர் வரை கொண்ட கடற்கரைப் பகுதிகளில் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டைகள் சேகரிக்கும் பணியை வனத்துறையினர் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டு நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியக் கடற்கரை ஓரங்களில் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள் முட்டையிடுவது வழக்கம். அவ்வாறு இந்த வருடமும் இரண்டு மாதங்களுக்கு மேலாகக் கடலூர் மாவட்ட கடற்கரையோரங்களில் ஆமைகள் முட்டையிட்டு வருகின்றது. இந்த முட்டைகள் சேகரிக்கப்பட்டு, தேவனாம்பட்டினம் கடற்கரையில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு, அதில் குஞ்சு பொரிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முட்டையிலிருந்து ஆமைக் குஞ்சு வெளியே வந்தவுடன், மீண்டும் கடலில் சில நாட்களுக்குப் பிறகு விடப்படும். இப்படி விடப்படும் ஆமைக் குஞ்சுகள், பதினைந்து வருடங்கள் கழித்து மீண்டும் இதே இடத்திற்கு வந்து முட்டையிடும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.