கடலூரில் அதிமுகவினர் பல்வேறு குழுக்களாகச் செயல்பட்டு வருகின்றனர், இதில் பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் ஒருதரப்பினர் ஆகவும்; தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் மற்றொரு தரப்புமாக செயல்படுவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் தேர்தல் முன்விரோதம் காரணமாக எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான பண்ருட்டி திருவதிகை சுண்ணாம்புகாரத் தெருவைச் சேர்ந்த மணிகண்டன், பாலாஜி ஆகிய இருவரை கடந்த 14ஆம் தேதி, இரவு விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தின் ஆதரவாளர்கள் 20 பேர் சரமாரியாக வெட்டி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன், ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர் ஜவ்வாது உசேன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 20 பேரைத் தேடி வந்தனர். இந்தக் கொலை தொடர்பாக, முன்னாள் கவுன்சிலர் அய்யப்பன், அவரது மகன்கள் பத்மநாபன், பிரகாஷ் ஆகியோரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாலு, லோகநாதன், ராமச்சந்திரன், மாரிமுத்து, ராஜேஷ், சந்தோஷ் உள்பட 9 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 8 பேரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: யூ-டியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய பாய்ஸ்...!