மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அண்ணாகிராமம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய செயற்பொறியாளர் தமின்முன்ஷா தலைமையிலான பறக்கும் படையினர் கந்தர்வக்கோட்டைபகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன்னாலான நரசிம்மர் சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் காரை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சென்னையைச் சேர்ந்த சைமன் (33) என்பது தெரியவந்தது. அவர் இச்சிலையை கும்பகோணத்தில் உள்ள சிற்ப கூடத்திற்கு கொண்டு செல்வதாகக் கூறினார். இதற்கான உரிய ஆவணம் ஏதும் அவரிடம் இல்லாததால் நரசிம்மர் சிலையை பண்ருட்டி தாசில்தார் கீதா, துணை தாசில்தார்கள் தனபதி, மோகன், செந்தமிழ் செல்வி ஆகியோர் பறிமுதல் செய்தனர். மேலும் சிலையின் விவரம் குறித்து கார் ஓட்டுநர் சைமனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.