கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கம் ஊராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் சுசிலா தேவநாதன், அம்சலைகா தர்மராஜ் ஆகியோர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
தேர்தலில், சுசிலா தேவநாதன் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றார். இந்நிலையில், நேற்று மாலை திடீரென்று அடையாளம் தெரியாத சிலர் வெள்ளப்பாக்கம் பள்ளத்தெரு, மேட்டுத்தெரு பகுதிகளில் அதிரடியாக உள்ளே புகுந்து அங்குள்ள பொதுமக்கள் மீது சரமாரியாகக் கற்களை வீசித் தாக்கியுள்ளனர்.
அப்போது பெண்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடியுள்ளனர். மேலும், நான்கு வீடுகள், பொருட்களை அடித்து உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேவநாதன் தரப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நெல்லிக்குப்பம் காவல் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். நடந்த சம்பவத்தைக் கூறி எங்களுக்கு பாதுகாப்பு உடனடியாக வழங்க வேண்டும் என ஆக்ரோஷமாகக் கூறினார்கள்.
இந்நிலையில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தர்மராஜ் ஆதரவாளர்கள் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்குத் திரளாக வந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், காவல் நிலையம் அருகே இருந்த கட்டைகளை எடுத்து இரு தரப்பினரும் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டனர்.
இந்த காட்சி திரைப்படக் காட்சியை மிஞ்சும் அளவிற்கு காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். தற்போது அது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி இருவர் தீக்குளிக்க முயற்சி!