கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் தாக்கியதில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டு, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சீனர்கள் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஒரு நாள் யுத்தத்தில் உலகம் முழுவதும் சீனர்களுக்குத் தவறான பெயர் பரவிவிட்டது. இதனால் இந்தியா முழுவதும் சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற எதிர்ப்பு எண்ணம் மக்களிடையே மேலோங்கி நிற்கிறது.
மகாத்மா காந்தி வெளிநாட்டுப் பொருள்களைப் புறக்கணியுங்கள் எனக்கூறி ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். அதைப் போல சீனப் பொருள்களை வாங்கக் கூடாது என முடிவுசெய்து இந்தியா முழுவதும் மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். இந்திய ராணுவம் வலிமையானது.
பாகிஸ்தான் யுத்தத்தின்போது இரண்டு முனைகளில் போர் புரிந்த பலமான ராணுவம். கராச்சி வரை சென்று தாக்குதல் நடத்தி அப்பகுதியை மீண்டும் பாகிஸ்தானுக்கு அளித்த வரலாறு உண்டு. நமக்கும் சீனர்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லையென்றால், ஏன் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதைப் பிரதமர்தான் விளக்க வேண்டும்
சாத்தான்குளம் சம்பவம் மிகவும் மோசமானது. காவல் துறையினர் தங்களது பெயரைக் கெடுத்துக்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்” என்றார்.