கடலூர்: மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கொடுஞ்செயல்களை கண்டித்தும், தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று (ஜூலை 26) தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடந்தது. அந்த வகையில், கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடந்தது.
சிதம்பரம் வடக்கு வீதி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கைகளில் மெழுகுவத்தி ஏந்தி மணிப்பூர் கொடுஞ்செயல்களுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் உலக மனித குலத்தின் மனசாட்சியை உலுக்கி உள்ளது. ஆனால், அது மோடியின் மனசாட்சியை உலுக்கவில்லை.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திரெளபதியை கூட துகிலுரிய முயற்சித்தார்களே ஒழிய, நிர்வாணமாக்கவில்லை. ஆனால், இன்றைக்கு மோடி ஆட்சியில் பெண்களை நிர்வாணமாக்கி அழைத்துச் சென்று இருக்கிறார்கள். இது 2 பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமை அல்ல. பெண்ணினத்திற்கே ஏற்பட்ட கொடுமை. உலக மனசாட்சிக்கு ஏற்பட்ட கொடுமை. எந்த நாகரீக சமூகமும் இதை ஏற்றுக் கொள்ளாது.
இதையும் படிங்க: DMK Files 2: ‘ஆளுநரிடம் வழங்கிய தகரப்பெட்டி’.. உள்ளே இருந்தது என்ன? - பாஜக மாநிலத் துணைத் தலைவர் விளக்கம்!
இதைப் பற்றி மோடியை பேசச் சொன்னால் ராஜஸ்தான், சத்தீஸ்கர் என பேசுகிறார். எல்லாவற்றையும் பேசுங்கள். ஆனால், முதலில் மணிப்பூர் பற்றி பேசுங்கள். நாடாளுமன்றத்தில் பேசுவதில் மோடிக்கு என்ன சிரமம் இருக்கிறது? அமெரிக்கா, பிரெஞ்சு நாட்டின் நாடாளுமன்றங்களில் பேசும் மோடி, இந்திய நாடாளுமன்றத்தில் ஏன் பேசவில்லை? தைரியமாக பேராண்மையோடு பேசுங்கள். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுங்கள். குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமிய தலைவர்கள் சர்வ சாதாரணமாக நேருக்கு நேராக சுட்டுக் கொன்று விட்டு பாதுகாப்பாக போலீஸ் வாகனத்தில் ஏறிக் கொள்கிறார்கள். இதுதான் மோடி ஆட்சியின் சட்டம், ஒழுங்கு நிலை. இன்று காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் இதை ஒரு மக்கள் பிரச்னையாக மாற்றி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தி இருக்கிறோம்.
மக்கள் மன்றத்தில் இதற்கு நியாயம் கேட்கிறோம். மோடிக்கு எதிராக ஒரு மிகப்பெரிய மன உணர்ச்சி ஏற்படுகிறது. மோடி குற்றத்திற்கு துணை போகக்கூடாது. குற்றத்தை நியாயப்படுத்தக் கூடாது. இந்த மனப்பக்குவத்தை இனிமேலாவது இறைவன் மோடிக்கு அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நேர்மறை அரசியல் தெரியாது, எதிர்மறை அரசியல்தான் தெரியும். யாரோ அவரிடம் ஏட்டிக்கு போட்டியாக பேசினால், விளம்பரம் கிடைக்கும் என தவறாக கூறியிருக்கிறார்கள். நாங்கள் கூட ஜனாதிபதியைச் சந்தித்து 50 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருக்கிறது என கூறலாம்.
ஆனால் அதில் என்ன உண்மை இருக்க முடியும்? அதுபோலத்தான் அண்ணாமலை செயலும், அவர் குற்றசாட்டை வீசிக் கொண்டே போகலாம். ஆனால், அதை அவரால் நிரூபிக்க முடிகிறதா? இப்படித்தான் அவர்களது அரசியல் செல்கிறது. இது நல்ல அரசியல் அல்ல.
அதிமுக என்பதே ஒரு போலி முகம்தான். அவர்களுக்கு சமூகப் பிரச்னைகள் மீது அக்கறை கிடையாது. மோடியா, லேடியா என ஜெயலலிதா கூறியதுபோல், இவர்களுக்கு கேட்கும் தைரியம் கிடையாது. அவர்களது இயக்கம் ஒரு சந்தர்ப்பவாத இயக்கம். எனவே, அவர்களிடம் கொள்கையை எதிர்பார்க்க முடியாது.
மோடி பக்கம் குற்றம் இருப்பதால் அவர் பேசவில்லை. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதுபோல் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் மோடி பேச வேண்டும் என்பதற்காகத்தான் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவ்வாறு அவர் பேசாவிட்டால் ஜனாதிபதியே அவரை பதவி நீக்கம் செய்யலாம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை எங்கே? - சக்கர நாற்காலிக்கு இடையூறாக உள்ள கம்பங்களை அகற்றக்கோரி மனு!