கடலூரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
உலகளாவிய கண்ணோட்டம் கொண்ட பாரதியாருக்கு, காவி குல்லா கொடுத்தது ஆர்எஸ்எஸ். பாரதியார் எப்போதுமே வெள்ளை குல்லாதான் அணிவார். எல்லோரும் தேசியவாதிகளாக இருந்தபோது பாரதியார் மட்டும்தான் உலகம் தழுவிய ஒரு பார்வை உடையவராக இருந்தார். அவருக்குக் காவிக் குல்லா கொடுத்தது தவறு. தற்போது இந்திய அணிக்கு காவியுடை கொடுத்ததும் தவறான ஒன்று. இதேபோன்று செய்தார்கள் என்றால் இவை அனைத்தும் மக்கள் மனதில் அதிகளவு வெறுப்பைத் தூண்டும். எதையுமே கட்டாயமாக்கினால் மக்கள் அதை விரும்ப மாட்டார்கள். இயல்பாக ஏற்றுக் கொள்ளுமாறு இருக்க வேண்டும். இச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
விவசாயத்திற்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்றால் கூட புரிந்துகொள்ளலாம். மழை பெய்யவில்லை எனவே விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு வாய் தண்ணீர் குடிப்பதற்கு குடிக்க கிடைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம். இயற்கை பொய்த்து விட்டது என்று போன பருவ மழையிலேயே தெரிந்துவிட்டது.
அப்போதே ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் நேற்று பத்திரிக்கையில் வருகிறது தண்ணீர் குழாய் பதிப்பதற்கு அடிக்கல் நாட்டுகிறார்கள் என்று. இதற்கு மேல் திட்டத்தை செயல் படுத்துவதற்குள் மழை வந்துவிடும். ஒப்பந்தக்காரர்கள் பின் வாங்கி விடுவார்கள். இதைக் கூட மக்களுக்கு செய்ய முடியவில்லை எனில் இதனை ஏற்கவே முடியாது. ஆளும் அரசுக்கு சிறிதும் அச்சம் இல்லை, என்றார்.