சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மொத்தம் 13 மருத்துவர்கள் மற்றும் 36 செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் சிகிச்சை பெற்று பலனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள, தண்ணீர்த்தொட்டியின் அருகே ஒரு துணிப்பைக் கிடந்தது. மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பையைத் திறந்து பார்த்தபோது, பையில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பச்சிளம் பெண் குழந்தைக் கிடந்துள்ளது.
தொப்புள்கொடி காயாத, பிறந்து சிறிது நேரமே ஆன, பையிலிருந்த அந்தக் குழந்தையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர், குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உடனடியாகச் சேர்த்தார். பின்னர் அந்தக் குழந்தை முழுவதுமாக சுத்திகரிக்கப்பட்டு, தொப்புள் கொடி அகற்றப்பட்டு இன்குபேட்டரில் பாதுகாப்பாகத் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், இதுகுறித்து சிதம்பரம் நகரக் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.