கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 58 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 30 பயனாளிகளுக்கு இணைப்புசக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், ஐந்து பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் இன்று வழங்கினார்.
பின்னர் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், “தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புசக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ஆண்டுதோறும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டுவருகிறது.
இத்திட்டம் கல்வி பயில்வோர், வேலைக்குச் செல்பவர்கள், சுயதொழில் புரிவோர் உள்ளிட்டவர்களுக்கு உதவிடும் வகையில் மாவட்ட தேர்வுக் குழு மூலம் நேர்முக தேர்வு நடத்தப்பெற்று வழங்கப்பட்டுவருகிறது.
மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்காக தையல் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், 75 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குறையுடைய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கும் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக இன்றைய தினம் 30 பயனாளிகளுக்கு இணைப்புசக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், ஐந்து பயனாளிகளுக்கு மோட்டார் தையல் இயந்திரம் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக மீதம் உள்ள 70 பயனாளிகளுக்கு இணைப்புசக்கரம் பொருத்தப்பட்ட 55 பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 15 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன” என்றார்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாகிதா பர்வீன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலுசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், கடலூர் ஊராட்சி தலைவர் தெய்வ பக்கிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.