கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் கடலூர் மாவட்ட கரோனா தடுப்பு அலுவலராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார்.
ககன்தீப் சிங் இன்று (ஜூன் 26) கடலூர்- புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடி, கரோனா தொற்று பாதித்த பகுதிகளான ஆல்பேட்டை, திருப்பாதிரிபுலியூர், வெள்ளிமோட்டான்தெரு, தண்டபானி நகர் ஆகிய பகுதிகளை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனுடன் சென்று ஆய்வுசெய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப், 'பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றிற்கு நேரில் சென்று தெரிவிக்க வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டதாக, பல்வேறு பகுதிகள் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, அப்பகுதி மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம்.
கடலூரில் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 10 மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. முதலமைச்சர், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், ஒரு மருத்துவமனையில் 60 முதல் 70 விழுக்காடு படுக்கைகள் நிரம்பிவிட்டால், அடுத்த மருத்துவமனையைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும்;
கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் தொய்வின்றி சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
ஆகையால், பொதுமக்கள் யாரும் அச்சப்படவேண்டாம். மேலும், தொற்று ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு சரி செய்து கொள்ளலாம்" என்றார்.
இதையும் படிங்க: கடலூரில் உதவி ஆய்வாளர் உள்பட மூவர் ஆயுதப்படைக்கு மாற்றம்