கடலூரில் இன்று (ஜூலை 16) வரை, கரோனா தொற்றால் 1,619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரையும் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்து, சத்தான உணவுகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூரில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில், 16ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை, தொடர்ந்து நான்கு நாள்களுக்கு கடைகளை அடைத்து கரோனா தொற்றுப் பரவாமல், மக்களைக் காப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று (ஜூலை 16) காலை முதல் பண்ருட்டியில் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள், காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் என சுமார் 1,500 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதில் நகைக்கடைகள், அடகுக் கடைகள் போன்ற கடைக்காரர்கள் இந்த கடையடைப்பில் கலந்துகொள்ளாமல் கடைகளைத் திறந்து வைத்துள்ளனர்.