ஆழ்கடலில் இருக்கும் பவளக்கொடிகள், மீன் குஞ்சுகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சுருக்குமடி வலைகளை மீனவர்கள் பயன்படுத்த முன்னதாக தடை விதிக்கப்பட்டது. இதற்கு மீன்பிடி தொழிலை நம்பியுள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள், சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கக் கோரி இன்று (மார்ச்.24) போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாவிடில் தேர்தலை புறக்கணிக்க போவதாகத் தெரிவித்த மீனவர்கள், தங்கள் கிராமத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அரசியல் கட்சியினர் வரக்கூடாது எனவும் உறுதிபடத் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடலூர் காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இது குறித்து கடலூர் மாவட்ட துணை ஆட்சியர் ஜெகதீஸ்வரன் மீனவர்களிடம் பேசியபோது, ”நீதிமன்றத்தில் இது சம்பந்தமான வழக்கு இருப்பதால், சுருக்குமடி வலை குறித்து எவ்வித உத்திரவாதமும் அளிக்க முடியாது. தேர்தலுக்குப் பிறகு இது சம்பந்தமாக பேசி முடிவு எடுத்துக் கொள்ளலாம். நிச்சயம் நல்ல நடவடிக்கை எடுக்கப்படும்” என வாக்குறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:'இறையுணர்வுக்கு எதிரானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி' - கே.பாலகிருஷ்ணன்