கடலூர் கிழக்கு மாவட்ட திமுகவினர் சார்பில் நகரச் செயலாளர் கே. எஸ். ராஜா தலைமையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.
இதில் மார்ச் ஒன்றாம் தேதியில் பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு திமுகவினர் தலா 1 கிராம் தங்க மோதிரம், புத்தாடை ஆகியவற்றை வழங்கினர். மேலும் மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு பால், பழம், ரொட்டி உள்ளிட்டவற்றை வழங்கி திமுக தலைவரின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ. ஐயப்பன், மாவட்ட அவைத் தலைவர் து. தங்கராசு, மாவட்ட பொருளாளர் வி. எஸ். எல். குணசேகரன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்: டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி முகாம் தொடக்கம்