கடலூரில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி அன்று மதுவிலக்கு சிறப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து கடலூர் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தினார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் மதுப்பாட்டில்கள் கடத்தியவரை விடுவித்தார்.
இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் விசாரணை நடத்தினார். இதில் மது கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரை, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் காவல் ஆய்வாளர் லதா ஜாமினில் விடுதலை செய்ததும், இது குறித்து அவர் நீதிமன்றத்தில் முறையான தகவல் எதுவும் தெரிவிக்காதது தெரியவந்தது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்தது எழுத்தர் சுப்பிரமணியன் என்பது தெரிய வந்தது. இதனையொட்டி இன்ஸ்பெக்டர் லதா மற்றும் எழுத்தர் சுப்பிரமணியன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமாருக்கு காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரை செய்தார். அதன்படி இவர்கள் இருவரையும் டிஐஜி சந்தோஷ்குமார் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.