பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், காவேரி-கோதாவரி நதிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மோடி அரசை பெருந்தலைவர் மக்கள் கட்சி பாராட்டுவதாக தெரிவித்தார்.
அதே வேளை தமிழ்நாட்டில் ஓடும் நதிகளை இணைப்பதற்கான முயற்சியை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்த தனபால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதத்திற்குள் தரவேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ்நாடு முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு வேதனை தெரிவித்த அவர், தண்ணீர் பிரச்னைகளுக்கு போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நன்றி கூறினார்.
ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஸ்டெர்லைட் போன்ற கொடிய திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய தனபால், மக்கள் இத்திட்டத்தால் வரும் பாதிப்புகளை உணர ஆரம்பித்ததை உணர்ந்த திமுக போராட்டம் என்ற போர்வையில் நாடகம் ஆடுவதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.