கடலூர்: ஆடி மாதம் என்றாலே கோவில்களில் திருவிழா களைகட்டுவது வழக்கம். ஆடி மாதத்தில் வரும் நான்கு வெள்ளிக்கிழமைகளிலும் கோயில்களில் திருவிழா என்பது விமரிசையாக நடைபெறும். மேலும், அந்தந்த பகுதி ஊர் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் பகுதிகளில் கோயில் திருவிழாவை நடத்துவர். இதுபோன்று விசேஷ தினங்களில் சுவாமியை அலங்காரம் செய்து வீதி உலா அழைத்து வருவதில், ஊர்மக்கள் பெருமளவில் நாட்டம் கொண்டிருப்பர்.
மேலும், திருவிழா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை கொண்டாட்டமும், ஆர்வமும் அதிகரித்துவிடும். சண்டைகள், மகிழ்ச்சி, குதூகலம் என நிறைந்து காணப்படும் திருவிழாவில் சில எதிர்பாராத அசம்பாவிதங்களும் அவ்வப்போது நிகழ்ந்தேறி விடுகின்றன. அப்படி நேற்று நள்ளிரவு (ஆகஸ்ட் 10) கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எவரும் எதிர்பாராத வகையில் நடந்த விபத்து, அனைவரையும் ஆழ்ந்த சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவி கிராமத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு முத்தாலம்மன் கோயிலில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், விடிய விடிய ஊரைச்சுற்றி வீதி உலா நடைபெற்றது. இதில் சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு, வீதி உலா வந்த சாமியை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவர்களின் கோரிக்கைக்கு 13 வயதாகிறது.. அன்புமணி ராமதாஸ் அறிக்கை!
அப்போது எதிர்பாராத விதமாக வீதி உலா செல்லும் சாமியுடன் பிடிப்புக்காக கட்டப்பட்ட இரும்பு குழாய், மேலே சென்ற மின் கம்பி மீது உரசியதில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட மாணவர் கோகுலகிருஷ்ணன் (18) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், திருமுருகன், ராஜேஷ் உட்பட 10 பேர் இதில் காயம் அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து காயமடைந்த நபர்கள், உடனடி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த 10 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்பொழுது இரண்டு இளைஞர்கள் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீடு திரும்பி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கோவில் திருவிழாவில் அனைவரும் கூடி வழிபாடு நடத்தும் நிகழ்வில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து காடாம்புலியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பராமரிப்பின்றி கிடக்கும் சாலை மின்விளக்குகள் - விபத்துக்கு வழிவகுக்கிறதா நகராட்சி?