கடலூர் மாவட்டம் பச்சயங்குப்பம் பகுதியின் அருகே ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகே வாலிபர் ஒருவரின் பிணம் கிடந்துள்ளது.
இதனைக் கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள் கடலூர் முதுநகர் காவல்துறையினருக்கும், ரயில்வே காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இறந்த வாலிபர் கடலூர் பச்சையங்குப்பத்தைச் சேர்ந்த சசிதரன் (29) என்பது தெரியவந்தது. பின்னர் இறந்தவரின் உடலில் காயங்கள் இருந்ததையடுத்து ரயில்வே காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கடலூர் முதுநகர் பகுதியில் இருந்து விழுப்புரம் வரை ரயில் தண்டவாளத்தில் மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருவதால் அங்கு திருடச் சென்ற போது மின்சாரம் தாக்கி சசிதரன் இருந்தாரா இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் ரயில்வே காவல்துறையினரும் கடலூர் முதுநகர் காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தண்டவாளத்தின் அருகே கேட்பாரற்று கிடந்த இளைஞரின் பிணத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.