கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் மார்கெட் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் என்பவரின் மகன் பிரேம் (19). இவர் நேற்று மாலை நான்கு மணியளவில் சூரப்பன் நாயக்கன் சாவடிக்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருக்கும் தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அங்கே இருந்த விவசாயிகள் அவரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர். ஆனால் கடைசி வரைக்கும் அவர் கீழே இறங்காமல் பிடிவாதத்துடன் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்குள்ளவர்கள் தீயணைப்புத் துறைக்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் சித்ரா, சிறப்பு காவல் ஆய்வாளர் மகாலிங்கம் உள்ளிட்டோ, அந்த இளைஞரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் இறங்காமல், விடிய விடிய தென்னை மரத்திலேயே அமர்ந்திருந்துள்ளார். காலையில் பெற்றோர் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கீழே இறங்கினார். தற்போது தற்கொலைக்கான காரணம் குறித்து இளைஞரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு அலுவலர்களைக் கண்டித்து முதியவர் தற்கொலை முயற்சி