உலகையே அச்சுறுத்திவரும் கரோனா பெருந்தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது. இந்தப் பெருந்தொற்றால் இதுவரை 14 ஆயிரத்து 352 பேர் பாதிக்கப்பட்டும், இரண்டாயிரத்து 41 பேர் குணமடைந்தும், 486 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
மீதமுள்ள 11 ஆயிரத்து 825 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் கரோனா பரவலைத் தடுக்கும்வகையில் மே 3ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது.
இந்தப் பெருந்தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், சுய தனிமைப்படுத்துதல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைசெய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர அநாவசியமாக வெளியே வருவதைத் தவிர்க்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி அத்தியாவசியத் தேவையில்லாமல் பொறுப்பற்ற முறையில் பலர் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்துள்ளனர்.
அவ்வாறு சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளைக் காவல் துறையினர் பிடித்து வாகனங்களை பறிமுதல்செய்தனர். இதுவரை நான்காயிரத்து 524 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆயிரத்து 755 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டிய அதிமுக பிரமுகர் - வழக்குப்பதிவு செய்த காவல் துறை!