கடலூர் மாவட்டம் சுப்பராயலு நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சையது உசேன். இவர் கடலூர் குற்றப்பிரிவில் காவல் துணை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சலீம் மாலிக்(26) பொறியியல் படிப்பு முடித்துவிட்டு புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர், வீட்டில் இருந்தவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு உறங்குவதற்கு தனது அறைக்குச் சென்றுள்ளார். இன்று காலை வெகு நேரம் ஆகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரது தாய், அக்கம் பக்கத்தில் உள்ள காவலர்களின் உதவியுடன் அறையின் கதவை உடைத்துப் பார்த்துள்ளார்.
அப்போது, சலீம் மாலிக் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக்கண்ட அவரது தாயார் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இச்சம்பவம் குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர்.
இதன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சலீமின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து சலீம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்து பெண் உயிரிழப்பு!