கடலூர் மாவட்டம், காடாம்புலியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்த குமார், தனது சக காவலர்களுடன் மணல் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு, மாளிகம்பட்டு கெடிலம் ஆற்றின் தென்கரையில் அக்டோபர் 23ஆம் தேதி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை நிறுத்தி, காவல் துறையினர் விசாரணை செய்தனர். இதில், வண்டியை ஓட்டி வந்தது பண்ருட்டி மாளிகம்பட்டு பகுதியைச் சேர்ந்த குருசாமி (45) என்பதும், அவர் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதற்கிடையே, வண்டியின் பின்னால் உட்கார்ந்து வந்த சுப்பிரமணியன் என்பவர் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து, குருசாமியைக் கைது செய்த காவல் துறையினர், காடாம்புலியூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். தப்பியோடிய சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.
காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் மலர்விழி மேல்விசாரணை செய்ததில், ஏற்கெனவே குருசாமி மீது மூன்று மணல் கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
எனவே, குருசாமியின் குற்ற செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அவரை ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டார்.
இதைத் தொடர்ந்து குருசாமி ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதைுயும் படிங்க : மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கு - கணவருக்கு ஆயுள் தண்டனை!