கடலூர்: பண்ருட்டி அருகில் பணிக்கன் குப்பம் என்ற இடத்தில், கடலூர் திமுக மக்களவை உறுப்பினர் ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கே கோவிந்தராஜ் என்ற தொழிலாளி 15 ஆண்டுகளாக வேலை செய்துவந்தார். இவர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.
அவரை நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷும், அவரது ஆட்களும் தாக்கிக் கொலை செய்துவிட்டார்கள் என்று கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதற்கிடையே பாமக பிரமுகரான வழக்கறிஞர் கே. பாலு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் கோவிந்தராஜின் உடலை கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்தனர்.
வழக்கின் தீவிரத்தையடுத்து, தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு கோவிந்தராஜின் சந்தேக மரணம் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து இவ்வழக்கை காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூரைச் சேர்ந்த நான்கு ஆய்வாளர் கொண்ட சிபிசிஐடி காவல் துறையினர் செப்டம்பர் 28ஆம் தேதி விசாரணையைத் தொடங்கினர்.
புதுப்பேட்டை காவல் ஆய்வாளர், காடாம்புலியூர் காவல் நிலையத்தின் பொறுப்பு ஆய்வாளர் சம்பவத்திற்குப் பிறகு தொழிலாளர்களிடம் நடத்திய விசாரணை குறித்த விவரங்களை சிபிசிஐடி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
எம்பி உள்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ், அவரது ஊழியர்கள் ஐந்து பேர் சேர்ந்து கோவிந்தராஜை அடித்து, விஷம் கொடுத்து கொலைசெய்தது தெரியவந்தது.
வழக்கின் திருப்புமுனையாக கடந்த 9ஆம் தேதி சிபிசிஐடி காவல் துறையினர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ், அவரது ஊழியர்கள் ஐந்து பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். ஊழியர்களான நடராஜன், கந்தவேல், அல்லாபிச்சை, வினோத், சுந்தராஜன் ஆகிய ஐந்து பேரை சிபிசிஐடியினர் கைதுசெய்தனர். தலைமைறைவாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை சிபிசிஐடியினர் தீவிரமாகத் தேடிவந்தனர்.
எம்பி நீதிமன்றத்தில் சரண்
இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பண்ருட்டி இன்று (அக். 11) நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்தக் கொலை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆர்யன் கான் பிணை மனு இன்று விசாரணை!