கடலூர்: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல், 21 மாநகராட்சிகளுக்கும்,138 நகராட்சிகளுக்கும்,439 பேரூராட்சிகளுக்கும் கடந்த பிப்.19 அன்று நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, கடந்த பிப்.19 அன்று 31,150 வாக்குச்சாவடிகளில் காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவுகள் நடந்துமுடிந்தது. வாக்கு எண்ணிக்கை பிப்.22 நடைபெற்றது.
இதில், சென்னை உள்பட 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது மட்டுமல்லாமல் நகராட்சி, பேரூராட்சிகளிலும் பெரும்பாலான இடங்களையும் வென்றுள்ளது. இந்நிலையில், கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வார்டுகளில் திமுக முழுமையான வெற்றி பெற வேண்டும் எனப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதில் கடலூர் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள கோ.அய்யப்பன் தன் முயற்சியால் 1 முதல் 45 வார்டுகளை தான் முழுமையாக வெற்றி பெறச்செய்வேன் என அறிவித்திருந்தார்.
தேர்தலில் போட்டியிட மறுக்கப்பட்ட வாய்ப்பு
அதன்பேரில் நகர் முழுவதும் சுறுசுறுப்பாக தேர்தல் பரப்புரை செய்துமுடித்தார். அதற்கு துணையாக கட்சி நிர்வாகிகளும் செயல்பட்டனர். கடலூர் 2ஆவது வார்டில் கீதா குணசேகரன் என்பவர் போட்டியிட்டார். அவரது கணவர் குணசேகரன் என்பவர் திமுகவின் மாவட்டப் பொருளாளராக உள்ளார். இவருக்கு பலமுறை கட்சியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நடந்து முடிந்த சட்டப்பேரவைத்தேர்தலில், கடலூர் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அய்யப்பனுக்கும் பக்கபலமாக நின்று வாக்கு சேகரித்தார், குணசேகரன். இந்நிலையில் கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பன் கொடுத்த நம்பிக்கையில் தன்னுடைய சொத்தை அடமானம் வைத்து, கடலூர் மாநகராட்சியில் களம்கண்ட திமுக வேட்பாளருக்கும் தேர்தலில் செலவு செய்ய லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கட்சிக்கு எதிராக செயல்பட துணிந்தாரா அய்யப்பன்?
கண்டிப்பாக குணசேகரனின் மனைவி கீதா மேயராக வருவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் மேயர் தேர்தல் நடைபெற முதல் நாள் திடீரென தலைமைக்கழகம் கடலூர் நகரச் செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரியை மேயர் வேட்பாளராக அறிவித்தது. இது திமுக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அன்றைய தினம் இரவு கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதிக்குச் சென்றுதங்கியுளளனர். இதுசம்பந்தமாக கட்சித் தலைமை, சட்டப்பேரவை உறுப்பினரும் பேசி உடனடியாக ராஜா சுந்தரியை வெற்றிபெற செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது.
ஆனால், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக பல லட்சக்கணக்கில் செலவு செய்த கீதா குணசேகரன் மாற்றப்படுவதால் கட்சிக்கு எதிராக செயல்பட துணிந்தார் என்று அய்யப்பனை கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வத்துக்குத் தொடர்பா..?
பின்னர், மேயர் தேர்தல் அன்று புதுச்சேரியில் இருந்து காலை 7 மாமன்ற உறுப்பினர்கள் உடன் அய்யப்பன் விடுதியிலேயே போலீசாரால் சிறை வைக்கப்பட்டார். இதனால் மாநகராட்சியில் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த கீதா குணசேகரன் 12 வாக்குகளை மட்டுமே பெற்று இருந்தார். சுந்தரி ராஜா 20 வாக்குகள் பெற்றிருந்தார். சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பன் தனக்கு விசுவாசமாக இருந்த குணசேகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். இது குற்றம் இல்லை என நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் திமுகவில் பெரும்செல்வாக்கைப் பெற்றவர்.
இவர் வைத்தது தான் மாவட்டத்தில் எழுதப்படாத சட்டமாக உள்ளதாகவும்; அதன்படிதான் கட்சியும் நடைபெறுகின்றது எனவும் தெரிகிறது. ஆரம்ப காலத்திலிருந்தே எம்ஆர்கே பன்னீர்செல்வமும், கடலூர் சட்டப்பேரவை உறுப்பினரும் எதிர்எதிராக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பன், கீதா குணசேகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், அமைச்சரும் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனக்கு வலது இடது கரமாக இருக்கும் கடலூர் நகரச்செயலாளர் ராஜாவின் மனைவிக்கு மேயர் பதவியை கொடுக்க தலைமைக்குப் பரிந்துரை செய்து தனது காரியத்தை கச்சிதமாக முடித்துக்கொண்டார்.
கட்சியிலிருந்து நீக்கம்
இதனையடுத்து கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பனை திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதேபோன்று, கோவை மாவட்ட நிர்வாகி மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கடலூர் திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்; கோவையிலும் பாய்ந்த ஒழுங்கு நடவடிக்கை