கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடலூர் மாவட்டத்தில் கரானா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 18 குழுக்கள் அமைத்து பொதுமக்கள் கூடும் இடங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளிலிருந்தும் இந்தியாவில் கரானா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள அண்டை மாநிலங்களில் இருந்தும் கடலூர் மாவட்டத்திற்கு வந்த 112 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதுச்சேரிக்கு வெளிநாட்டவர்களின் வருகை அதிகமாக இருப்பதால் எல்லைப் பகுதிகளில் ஏழு சோதனைச்சாவடிகள் அமைத்து தனியார் வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கிருமிநாசினி தெளிப்பான்கள் மற்றும் நாளுக்கு இரண்டு முறை கழுவுவதற்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. கடலூர் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்யும் தனியார் நிறுவனங்களை மூடுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் சுத்தமாக வைக்கவும், வரக்கூடிய பொதுமக்களுக்கு கிருமி நாசினி பயன்படுத்தி உள்ளே அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகள், 21 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் கரோனோ வைரஸ் காய்ச்சல் தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது” என்றார்.