தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் போர்க்கால அடிப்படையில் ஜூன் 30ஆம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவை மீண்டும் அரசு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கடலூரில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு தீட்சிதர்களும் அடங்குவர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்றும் (ஜூன் 27); நாளையும் (ஜூன் 28) ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தீட்சிதர் மட்டும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 150 தீட்சிதர்களுக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது. அதில் இரண்டு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 16 பேரும் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 932ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து குணமடைந்து 534 பேர் வீடு திரும்பி உள்ளனர்.