கடலூர்: கடலூர் மாவட்டத்தின் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை பாழாக்கி, வயல்வெளியில் கால்வாய் தோண்டும் பணிகளை பலத்த போலீசார் பாதுகாப்புடன் என்எல்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கு பாமக உள்ளிட்டப் பல அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பருவமழை தொடங்கிய நிலையில், கடன் பெற்று விளைவித்த நெற்பயிர்களை இப்படி அழித்து வரும் என்எல்சி நிறுவனத்தின் செயலுக்கும், இதனை கைகட்டி வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கும் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலங்களை கையகப்படுத்துவதற்கு உரிய இழப்பீடாக பணம் அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான், பணம் கொடுத்திருந்தாலும் பொதுத்துறை நிறுவனத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு எதிராக அரசே இவ்வாறு அநீதி இழைப்பதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்குமாறும் மேற்கொள்ளும் இப்பணிகள் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் தனது சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி உள்ளன. இந்த நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிலங்களை கையகப்படுத்துவதற்கு கிராம மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சில இடங்களில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் நிலத்தில் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியில் இன்று (ஜூலை 26) ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த கிராமத்தில் வடிகால் வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. அந்த வாய்க்கால் பணியை தொடர்வதற்காக விலை நிலங்களில் நவீன இயந்திரங்கள் மூலம் வாய்க்கால் வெட்டும் பணியைத் துவக்கி நடத்தி வருகிறது.
இந்தப் பணிக்கு பொதுமக்கள், விவசாயிகள், சில அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரம் சரக போலீஸ் டிஐஜி ஜியாவுல் ஹக், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர்களது தலைமையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியில் என்எல்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாமக உள்ளிட்ட சில கட்சிகள் போராட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வளையமாதேவி, எழும்பூர், தர்மநல்லூர், சேத்தியாத்தோப்பு குறுக்கு சாலை உள்ளிட்ட கிராமங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், 'என்எல்சி நிறுவனம் தற்பொழுது கையகப்படுத்தும் நிலத்திற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே பணம் கொடுத்துவிட்டதாக' தெரிவித்துள்ளார்.
என்எல்சி நிறுவனம் நிலத்திற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே பணம் கொடுத்துவிட்டு நிலத்திற்கு பணம் கொடுக்கும் போது அதனை கையகப்படுத்தி இருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. அந்த நிலம் விவசாயிகளிடமே இருந்ததுதான் தற்போதைய பிரச்னைக்கு காரணம். இதனிடையே, என்எல்சி நிறுவனம் தற்போது நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 800 மெகாவாட் மின்சாரம் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மேலும் ஆயிரம் மெகா வாட் மின்சாரம் குறையும் என என்எல்சி எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால், கடந்த டிசம்பர் மாதமே விவசாயிகளிடம் விளைநிலங்களைப் பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையும் மீறி விவசாயிகள் தற்போது நெல் பயிரிட்டு உள்ளனர். இருந்தாலும், இதையும் ஏற்றுக்கொண்டு பயிரிடப்பட்டுள்ள விலைப் பயிர்களுக்கும் இழப்பீடு கொடுப்பதற்கு தற்பொழுது என்எல்சி நிர்வாகம் முன்வந்துள்ளது.
தற்போது 30 ஹெக்டேர் நிலம் உடனடியாக தேவைப்படுகிறது. அதில் தான் தற்பொழுது கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 74 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதி உயர் இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களில் 10 முறை இது தொடர்பாக கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அக்கூட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முடிவின் அடிப்படையிலேயே தற்போது கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி... இன்று இரவு முதல் வேலைநிறுத்தம்!