கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றும் இறுதியாண்டு மாணவர்கள் பல்கலைக்கழக மருத்துவமனையில் கரோனா வார்டுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 3 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தங்களுக்கு மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என இவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதனையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் இரண்டு நாட்களாக பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டி மனித சங்கிலியாக நின்றபடி கோஷங்களை எழுப்பினர்.
ஊர்வலமாக சென்று போராட்டப் பந்தலில் அமர்ந்து காந்தி, நேதாஜி உள்ளிட்ட தலைவர்களின் படத்திற்கு அஞ்சலி செலுத்திய பிறகு, மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்து தங்களது கோரிக்கையை அரசுக்கு வைத்து நூதன முறையில் அரசுக்கு தெரிவித்தனர்.