கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் பத்து நாள் நடைபெறும். அப்போது சாமி ஊர்வலம் செல்லும்போது பட்டாசு வெடிப்பது வழக்கம்.
இந்நிலையில், இந்தாண்டுக்கான திருவிழாவிலும் பட்டாசு வெடிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பாஸ்கர் என்ற பச்சையப்பன் (50) தனது வீட்டில் பட்டாசு வாங்கிவைத்திருந்தார்.
அப்போது, அவர் வாங்கிவைத்திருந்த பட்டாசுகள் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில், பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர், உடல் கருகிய நிலையில் கிடந்த பாஸ்கரை மீட்டு உடற்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து பண்ருட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பட்டாசு வெடித்து உடல் கருகி இறந்த பாஸ்கருக்கு அமுதா என்ற மனைவியும், பாபு கணேஷ் என்ற மகனும், கவிபாரதி என்னும் மகளும் உள்ளனர்.