கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகர் பகுதியில் ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியரின் மனைவி பேபி (63). இவர் நேற்று நெய்வேலி பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்த ஒருவர், தான் காவல் துறையைச் சேர்ந்தவர் என அடையாள அட்டையை காண்பித்து, உங்களிடம் விசாரணை செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.
அதனை நம்பிய பேபி, அங்குள்ள ஒரு இடத்திற்குச் சென்றுள்ளார். மேலும் அந்தப் போலி காவலர் அங்கிருந்த மற்றொரு நபரிடமும் இதையே கூறி அவரையும் அழைத்துள்ளார். பின் இருவரையும் விசாரிப்பதுபோல் விசாரித்த போலி காவலர், கொரோனா பரவிவருவதால் இரண்டு நாள்களுக்கு யாரும் நகை அணியக்கூடாது எனக் கூறியுள்ளார்.
உடனே மற்றொரு நபர் தன் கழுத்திலிருந்த நகையைக் கழற்றி அவரிடம் கொடுத்துள்ளார். அதனை மடித்து அந்நபரின் பையிலேயே போலி காவலரும் வைத்துள்ளார். இதனைக் கண்ட பேபியும் தனது கழுத்திலிருந்த 12 சவரன் சங்கிலியைக் கழற்றி அந்தப் போலி காவலரிடம் கொடுக்க, அவரும் அதனைக் கைக்குட்டையில் கட்டி அந்தப் பெண்மணியின் பையில் வைப்பதுபோல் வைத்து, 'நீங்கள் செல்லுங்கள்' எனக் கூறியுள்ளார்.
வீட்டிற்குச் சென்று பையைப் பார்த்து நகை இல்லாததைக் கண்ட பேபி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவர் உடனடியாக நெய்வேலி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர்.
அப்போது, தான் காவலர் என்று பொய் கூறியவரும் நகை கழற்றிக் கொடுத்தவரும் கொள்ளையர்கள்தான் என்பதைக் காவல் துறையினர் கண்டுப்பிடித்தனர்.
மேலும் அந்நபர்கள் கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருச்சி போன்ற இடங்களில் இதேபோன்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதை அறிந்த காவல் துறையினர், அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனோ வைரசைப் பயன்படுத்தி சாலையில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:காதல் விவகாரத்தில் தலையிட்ட இரண்டு ரவுடிகள் கொலை