கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ராஜா முத்தையா மருத்துவமனை கரோனா சிகிச்சை மையமாக அறிவிக்கப்பட்டு, அங்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வேகமாக கரோனா தொற்று பரவி வருவதையடுத்து, கடலூர் மாவட்டத்தில் அதிகளவு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கோல்டன் ஜூபிலி தங்கும் விடுதியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக, இங்கு சேர்க்கப்படுவதால் தங்களுக்கு இடவசதி இல்லாமல் ஒரே அறையில் 5 அல்லது 6 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக நோயாளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், அவ்வாறு தங்கும் தங்களுக்கு கழிவறை, குடிநீர், உணவு நோயாளிகளுக்குத் தேவையான சுடுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியான முறையில் வழங்குவதில்லை எனக்கூறி 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த சிதம்பரம் வட்டாட்சியர் ஆனந்தன், டிஎஸ்பி லாமேக் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய நோயாளிகளிடம் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும், தங்களது கோரிகை நிறைவேற்றப்படும் என அலுவலர்கள் கூறியதையடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து வார்டுக்குச் சென்றனர்.