கடலூர் : நெய்வேலியில் கடந்த 1959ஆம் நிலக்கரி எடுக்க சுரங்கம் தோண்டப்பட்டது. பின்னர் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு, 1962ஆம் ஆண்டு ஜெர்மன் மற்றும் ரஷ்யத் தொழில்நுட்பங்களுடன் உலைகள் வடிவமைக்கப்பட்டு, முதல் அனல் மின்நிலையம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த அனல் மின் நிலையத்துக்கு 25 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதன் தரத்திற்கேற்ப ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டன. இந்த அனல் மின் நிலையம் ஒரு சில முறை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியது.
ஒரு அனல் மின் நிலையம் 20 ஆண்டுகள் மட்டுமே இயங்கலாம் என உலக அளவில் வரையறை செய்யப்பட்டுள்ளது. இதன்படி மத்திய பசுமைத் தீர்ப்பாயம், ஆயுட்காலம் முடிந்த நெய்வேலி என்.எல்.சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட உத்தரவிட்டது. அதன் பேரில் நெய்வேலி என்.எல்.சி முதலாவது அனல் மின் நிலையம் இன்று (செப். 30) மூடப்பட்டது.
இதனால் ஏற்படும் மின் உற்பத்தி இழப்பை ஈடுசெய்ய புதிய அனல் மின் நிலையம் செயல்படத் தொடங்கி உள்ளது. புதிய மின் நிலையத்தில், 1000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள 500 மெகா வாட் உற்பத்தி விரைவில் தொடங்கும். இந்த நிலையில், முதலாவது அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மற்ற அனல் மின்நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தர்மபுரியில் கனிம வளங்களை எடுக்க அறிவித்த டெண்டருக்கு நீதிமன்றம் தடை!