சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் டிப்ளமோ பாடப்பிரிவின் கீழ் படிக்கும் மாணவர்கள் சுமார் 30 பேருக்கு நடப்பு பருவத்திற்கான தேர்வு எழுத நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
வருகைப்பதிவு குறைவாக இருப்பதாகக் கூறி இவர்களுக்கான தேர்வு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் பொறியியல் கல்லூரி முதல்வர், துறைத்தலைவர் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் மாணவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று 30 மாணவர்கள் தங்களது பெற்றோருடன் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்திக்க வந்தனர். ஆனால் அவரைச் சந்திக்க முடியவில்லை. இதையடுத்து மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தின் எதிரே தரையில் அமர்ந்து மண்ணெண்ணெய் கேனுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பாத்திமா லத்தீப் இறப்பிற்கு நீதிகேட்டு ஐஐடியை முற்றுகையிட்ட மாணவ அமைப்பினர்