கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் இம்பீரியல் சாலையில் விஷால் மோட்டார்ஸ் என்ற இரண்டு சக்கர வாகன விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மனைவிக்கு சொந்தமான இந்த விற்பனையகத்தில், இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படும் தொகையானது இரவு அங்கேயே லாக்கரில் வைக்கப்பட்டு, மறுநாள் ஊழியர்கள் மூலம் வங்கியில் செலுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (அக்.11) வாகன விற்பனை மூலம் பெறப்பட்ட தொகைகள் அங்குள்ள 2 லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, இன்று காலை (அக்.12) ஊழியர்கள் வழக்கம்போல் இரண்டு சக்கர வாகன விற்பனை நிலையத்தை திறந்த போது, பின்னால் இருந்த ஜன்னலின் கம்பிகள் அறுக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு லாக்கர் இல்லாமல் மற்றொரு லாக்கர் திறக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு, ஊழியர்கள் மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து, மேலாளர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டதில், முதலில் ஜன்னல் கதவை அறுத்து கொள்ளையர்கள் உள்ளே வந்தது தெரியவந்தது.
மேலும், கொள்ளையர்கள் உள்ளே இருந்த ஒரு லாக்கரை தூக்கிச் சென்று வெளியில் வைத்து உடைத்து, அதிலிருந்த சாவிகளைக் கொண்டு மீண்டும் உள்ளே வந்து மற்றொரு லாக்கர் மற்றும் பீரோ போன்றவற்றைத் திறந்து உள்ளே இருந்த பணங்களை எடுத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது.
மொத்தமாக மூன்று லட்சம் ரூபாய் அளவில் பணம் கொள்ளை போன நிலையில், வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ஆறு ஒரு கிராம் தங்க நாணயங்களும் கொள்ளை போயுள்ளது. இதனை தொடர்ந்து, திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே நபர் என்பதும் அவர் வட மாநில தொழிலாளர் என்றும் உறுதியாகி உள்ளது.
அதைத் தொடர்ந்து, அந்த நபரைப் பிடிக்க போலீசார் மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, ஷோரூமில் லாக்கரை உடைத்து பணம் மற்றும் தங்க நாணயங்களை கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தேனி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞர் உயிரிழப்பு!